சனி, 1 செப்டம்பர், 2007

நிச்சயம்...

என்றாவது ஒரு நாள்..
ஒர் கணங்கிடைத்தால்...
மனமிருந்தால் - அதில்
என் நினைவிருந்தால்
என் சுடுகாட்டுச்
சாம்பலையாவது
போய்ப்பார் - உன் கணவனுடன்;

அன்றும் என் சாம்பலின் ஒவ்வொரு
அணுவின் இலத்திரன்களும் - நான்
கொண்ட உன் நினைவுகளை
காற்றில் கண்டிப்பாய்
எழுதி இரசித்துக் கொண்டிருக்கும்....!

நம்பிக்கை....

திரும்பி வருவோம் என்ற அதீத
நம்பிக்கையில்தான் ஒவ்வொரு
முறையும் காற்று மண்டலம்
நுரையீரல் தொடுகின்றது....



முட்டி மோதி முளைத்து
தளைப்போம் என்ற
நம்பிக்கையில்தான் விதைகள்
மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன...



ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த
சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும்
நம்பிக்கையில் தான் - தினமும்
பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது...



இன்றில்லாவிடிலும் என்றாவது
ஒருநாள் எனை நீ உணர்வாய்
எனும் அதீத நம்பிக்கையில் தான் உன்
நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்...