ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

ஆதங்கம்....!

இன்று என் இதய வாசலில்
நீர் தெளித்து கோலமிட்டவளே...
நீ, என் வீட்டுவாசலில்
கோலமிடுவது எப்போது...?

சூரியக் கோளில்
அள்ளி வந்த ஓர்வாளி
ஒளிப்பிளம்பு உன்
வதனம் - அடியே,
என் செவ்வாய்க்கிரகத்தின்
செந்தாமரையே என்றுன்
முகம் பார்க்கும்
கூர்ப்படைவேன்...!

சிந்தனை...

என்னருமைத் தோழர்களே...!
கூட்டமாய் வாரீர்...!

சூரியக் காட்டினின்
தீ கொண்டு வந்தே - நம்
தீந்தமிழ் அன்னைக்கு
ஒளி செய்திடுவோம்....!

நட்சத்திரத் தோட்டத்தில்
கீற்றெடுத்து - நல்ல வால்வெள்ளியின்
நுனியிடைக்கட்டி அவள்
ஒட்டடை தட்டிடுவோம்

பூமியின் மையத்து நூதனம் முதல்
செவ்வாய் தாண்டிய சாதனம் வரை
நம் தமிழ் மொழியில்
பொறித்திடுவோம் வாரீர்....?

லயத்தின் நிறைவு...

காட்டினை எரிக்கும்
தீங்கோபம் இருப்பினும்
என்னவள் நினைவில்
நதியாய் ஓடுவேன்...

ஒவ்வொரு விடியலும்,
ஒவ்வொரு இரவிலும் - ஏன்
ஒவ்வொரு செயலிலும்
சூரியக்கதிரிடை
தண்மணம் பரப்பிடும்
கமல வதனத்தாள்
என்னிடைக் காண்கின்றேன்

புரட்டிய ஏட்டின்
முகவுரையாள் - என்
கடிகாரத்தின் ஒலி
யுடையாள் - என்
இதயத்துடிப்பின் லயத்தினூடே காணும்
இடைவெளிகளில் நிறைந்திருப்பாள்

கற்பனையற்ற உண்மை....

எனது வாழ்க்கைப் பயணத்தின்
குறிப்பேடுகளைப் புரட்ட
முயல்கின்றேன்....!
இன்றிலிருந்து சிலவருடங்களுக்கு
முன்பு......

என் பெயர் சொல்லி
அழைத்த நிலாவின்
முகம் பார்த்து கண்
இமைப்பதை மறந்தேன்...!

தற்காலிகமாக் உள்ளே
நுழைந்து நிரந்தரமாக
இடமொன்று பிடித்தாள்....!

'டே' என்று அழைத்துப்
பின் அனுமதிகேட்டாள்;
அழைக்கவா என்று....!

புன்னகையைத்தவிர
தோன்றவே இல்லை
வேரொரு வார்த்தை...!

வியப்பு....

இதோ....!
ஓரத்தெருவோரம் சிந்திய பூக்களும்
மணம் பெற்றுச் சிலிர்க்கின்றனவே....!
உன் பாதச்சுவடுகளில்
நசுங்கி உயிர்த்தவையோ....!

நினைவு

என் உணவு நேரங்களின்
புரையேறும் நிமிடங்களைக்
கேட்டுப்பார்.....!

உன் நினைவலைக்கள் தொடர்ந்து
எனைத்தாகட்டுமே என்று
நீர் அருந்தியதே இல்லை.....!

யதார்த்தம்.....!

எரிந்து எரிந்து கரியும்
விறகாய் - நின்று
வெகுண்டு வெகுண்டு அடங்கிய
சோதரா....!

எதிரிக்கும் திண்ணையில்
விருந்திட்டு மகிழ்ந்திட்ட - என்
அருந்தமிழினமிங்கு பாழ்பட்டுப்
போவதா.....!

நேற்றைய வடுக்கள் முதற்
சுழி போடட்டும் - அன்று
பூட்டிய கதவுகள் திறந்தே
சாயாதா.....!

சகோதரர் நம்மிடை இனவாதம்
மூட்டிடும் பாதக
நெஞ்சர் எம்ம்மிடைச்சிக்கின்
மீள்வாரா....!
துப்பாக்கி வேட்டிலே துளைபட்ட
பனையிதுவா; கலங்காதே....!
நம் செல்லக்கிளிகளுக்கும்
வீடுகள் தேவைதான்...!