திங்கள், 15 டிசம்பர், 2008

நாளைய வேள்விகள்

நாம்...!
நேற்றைய செவ்வயல்களில்
தோற்றிய வீரப்புற்கள்

நாளைய வேள்விக்காய்
இன்றே மரணிக்கும்
தருப்பைப் புற்கள்...!

நாளைய வேள்வியின்
சுதந்திர யோதிக்காய்
இன்றே சாம்பராகும்
தன்மானப் புற்கள்...!

இறுதி வேரின்
உறுதித் துகள்
உள்ளவரை
பல பிறவி எடுத்து
நாளைய வேள்வியின்
நாமுமோர் அங்கமாவோம்...!

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

நீர்த்திவலையும் தாமரையிலையும்...!

தாமரை இலையின்
நீர்த் திவலை...!
எத்தனை முறை தான்
நீர் நினைத்தாலும்
ஒட்டிக்கொள்ள முடிவதில்லை - இலையுடன்;
நீர் பலமுறை சினந்திருக்கின்றது
இலைக்கு புரியவில்லையே என்று...!

பாவம் இலை...!
அதனால் என்ன செய்யமுடியும்
அதன் நெஞ்சுக்குள்ளும்
ஈரமுண்டு...
அதைவிட அதிகமாய்
வலிகளும் நிறையவே உண்டு
தடாக நீருக்கும்
நீர்த் திவலைக்குமிடையே
தடுமாறுகின்றது - இலை

எத்தனை முறைதான்
நீர்த்திவலைதனை அணைத்துக்கொள்ள
நினைத்தாலும்...
அதன் ஸ்பரிசத்தை
மட்டுமே இலையால்
கைது செய்ய முடிகின்றது.

இலை அழுதகண்ணீரில் தான்
தாமரைக் குளமே நீர்பெறுகின்றதென்பது
எத்தனை பூக்களுக்குத் தெரியும்

இருந்தாலும் என்ன...
நீர் இருக்கும் வரை
அதனைத் தன்மீது
தாங்கி...
பழகமட்டுமே முடியும்
இலையினால்...!

கவிதையின் பிறப்புக்காரணம்

புயல்கள் நிலைகொண்டாலே
தவிர...
தென்றலாக இருந்தால்
காற்றின் பிறப்புக்காரணம்
அறிய முயல்வதில்லை நாம்...!

அப்படித்தான்... கவிதைகளும்
அடுத்தவரை சாடாதவரைக்கும்
பிறப்புக்காரணம்
கவிஞனுக்கு மட்டுமே புரிந்த
இரகசியம்...!