என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன
எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு
ஒன்றும்விதிவிலக்கல்ல.
நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள்
கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே
வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும்.
குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி
ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம்.
நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு
சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து
குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னும் இருக்கு.
பந்தம் சுற்றும் கதை இப்படி என்றால், வாழைத்தார் வெட்டும் படலம் இன்னும்
சுவாரசியமானது. பின்னேரம் ஆவதற்குள் படலை வாசலில் வாழை நட்டு, யார் வீட்டு
வாழைத்தண்டு பருமன் கூடியது எண்டு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
சூரியன் மறையும் வரை காத்திருந்து, சுவாமி அறைக்கு ஒண்டு, குசினிக்கு
ஒண்டு, அம்மி, ஆட்டுக்கல்லுக்கு ஒண்டு, கிணதடிக்கு ஒண்டு,
மாட்டுக்கொட்டிலுக்கு ஒண்டு, குப்பை மேட்டுக்கு ஒண்டு, என்று எல்லா இடமும்
பந்தம் கொழுத்தி வைத்துவிட்டு, படலையிலே இருக்கும் வாழைத் தாரில்
பாதித்தேங்காயில் சிறிது தேங்காய் எண்ணை விட்டு, சீலைத்துணி போட்டு அதைக்
கொழுத்தி அழகு பார்த்தோமே....!
எங்கட வீட்டு தேங்காய் எரிஞ்சு முடிய வெளிக்கிடுவம். ஊர் சுத்த.... ஒராள்
ரண்டு பேர் போரில்ல. எப்பிடியும் குறைஞ்சது 8, 10 பேர் இருப்பம். பறாளாய்
ரோட்டில தொடங்கி, காழுவன் சந்தி போய் அப்பிடியே பானாவெட்டி
ஆஸ்பத்திரிக்கு முன்னால இருக்கிர குச்சொழுங்கைகால திரும்பி, வடக்கம்பரை
வரைக்கும் போய் ஒரு collection போடுவம். அது ஒரு
தனிவேட்டைதான். collection என்டோன்ன காசு என்டு நினைக்காதேங்கோ...!
7.30,... 8.00 மணிக்கு வெளிக்கிட்டா எல்லட்ட வீட்டிலயும் தேங்காய் கணக்கா
நெருப்பில வேகி மணம் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்த தேங்காய் சுடுரத தான்
சொன்னனான்.
ஒவ்வொருவரும் turn வச்சு, ஆளில்லாத வீட்டு தேங்காய்களை சுட்டுடுவம்ஒரு
தெருவில சுட்டு அடுத்த தெருவுக்கு போறதுக்குள்ள எல்லாருக்கும் பிரிச்சு
குடுத்து சாப்பிட்டு முடிச்சிடுவம். சுடச்சுட தேத்தண்ணி குடிக்க தெரியாத
நான் அந்த வயசில எப்படியாவது அடுத்த ஒழுங்கைக்க போறதுக்கு முதல்
சாப்பிடவேணும் எண்டு சாப்பிட்டு கிடைச்ச experience சை வச்சு தான் பிறகு
வீட்டில சுடச் சுட தேத்தண்ணி குடிக்க தொடங்கினனான் என்டா பாருங்கவன்.
எவ்வளவு வேகமா தேங்கா சாப்பிட்டு இருப்பம் எண்டு. தேங்க்க எடுக்க போய்
வீட்டுக்காறறிட்ட மாட்டுப்பட்ட கதையும் இருக்கு. ஒருக்கா இப்பிடித்தான்
ஒரு கூட்டாளிப்பெடியன் வீட்ட தேங்கா எடுக்க போய் அவன்ட அப்பர் பாத்து
கத்த, பானாவெட்டிக்கு முன்னால ஓடவெளிக்கிட்டனாங்கள் ஐக்கியசங்க பள்ளிக்குட
குச்சுக்க போய்தான் திரும்பி பாத்தனாங்கள்.
ம்ஹ்...., எல்லாம் இப்ப நினைச்சு பாக்க மட்டும் தான் முடியுது....! இப்ப
இங்க யார் வாழை வச்சு விளக்கு கொழுத்தினம். எங்களுக்கு கிடைச்ச இந்த
அருமையான அனுபவம் எல்லாம் எங்கட பிள்ளைகளுக்கு கிடைக்கும் எண்டு நான்
நினைக்கேல்ல...! இருந்தாலும் ஒரு நப்பாச. திரும்பவும், எங்களுக்கு நாடு
கிடைச்சு மறுபடியும் ஊரில போய் வாழ கிடைச்சா கண்டிப்பா என்டை
பிள்ளைகளையும் கூட்டிட்டு தேங்காய் எடுக்க போவன்....!
சனி, 13 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக